இது பதிப்பு 1.18 இன் மொழிபெயர்ப்பாகும். ஆங்கிலப் பதிப்பே (தற்போது v1.18) மேலோங்கும்.
கட்டண அமைப்பு
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 27 October 2026 (v1.18)
1. இந்த ஆவணம் பற்றிய விபரங்கள்
1.1 இந்தக் கட்டண அமைப்பில், Ceylon Seva (Pvt) Ltd. பயன்படுத்தும் கட்டணங்கள், அறவிடப்படும் தொகைகள், முன்பதிவுக்காக ஒதுக்கப்படும் மேலதிகத் தொகை மற்றும் முன்பதிவை இரத்துச் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தளத்தின் சேவை விதிமுறைகள் மற்றும் பணியின் தன்மைக்கேற்ற வெவ்வேறு ஒப்பந்தங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டணங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் இடங்களில், அதற்குரிய கட்டண விபரங்கள் பின்வரும் இணையப் பக்கத்தில் காணப்படும்: https://ceylonseva.work/fees
1.2 அனைத்துத் தொகைகளும் இலங்கை ரூபாயில் (LKR) குறிப்பிடப்படும். நேரங்கள் மற்றும் கட்டணக் கணக்கீட்டிற்கான வாரங்கள் இலங்கை நேரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். ஒரு கணக்கீட்டு வாரம் என்பது திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலப்பகுதியாகும். முன்கூட்டியே கமிஷன் அறவிடப்படும் ஆரம்பக் காலப்பகுதியானது, வேலை ஆரம்பிக்கும் திகதியிலிருந்து ஆரம்பித்து 14 நாட்கள் வரை நீடிக்கும். எனினும், அந்த ஒப்பந்தம் அதற்கு முன்னரே முடிவடைந்தால், ஒப்பந்தம் முடிவடையும் திகதியுடன் அக்காலப்பகுதியும் முடிவடையும். இக்காலப்பகுதிக்கான திகதிகள் முன்பதிவு உறுதி செய்யப்படும்போதே தீர்மானிக்கப்படுகின்றன. அதன் பின்னர், ஒப்பந்தத் திகதி மாற்றப்பட்டாலும் அல்லது ஒப்பந்தக் காலம் நீடிக்கப்பட்டாலும், அந்தக் காலப்பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்படவோ அல்லது நீடிக்கப்படவோ மாட்டாது.
2. கட்டணங்களும் அவற்றை கணக்கிடும் முறைகளும்
2.1 தொழிலாளருக்கான கட்டணம்: ஒப்புக்கொள்ளப்பட்ட மணித்தியாலக் கட்டணத்தை, கட்டணம் செலுத்த வேண்டிய மணித்தியாலங்களால் பெருக்குவதன் மூலம் தொழிலாளருக்கான கட்டணம் கணக்கிடப்படும். தொழிலாளருக்காக வசூலிக்கப்படும் தொகையில் எந்தவிதக் குறைப்பும் இன்றி, முழுத்தொகையும் தொழிலாளிக்கே வழங்கப்படும்.
2.2 சேவைக் கமிஷன்: இது தொழிலாளருக்கான கட்டணத்தின் 15% ஆகும். முன்கூட்டியே கமிஷன் அறவிடப்படும் ஆரம்பக் காலப்பகுதிக்கான கமிஷன், முன்பதிவு உறுதிசெய்யப்படும்போது பொருத்தக் கட்டணம் என்ற அடிப்படையில் ஒருமுறை அறவிடப்படும். அந்த ஆரம்பக் காலப்பகுதிக்கு அப்பாற்பட்ட ஏனைய நாட்களுக்கான கமிஷன் மட்டுமே வாராந்த வசூல்களில் உள்ளடக்கப்படும். ஆரம்பக் காலப்பகுதிக்கான கமிஷன் இரண்டு முறை அறவிடப்பட மாட்டாது.
2.3 பணம் வழங்கல் கட்டணம்: அட்டை மூலமான கட்டணத்தில் உள்ள ஏனைய தொகைகளின் 2.5% ஆக இக்கட்டணம் அமையும். பொருத்தக் கட்டணமாக செலுத்தப்படும்போது, சேவைக் கமிஷனே இக்கட்டணத்தைக் கணக்கிடுவதற்கான அடிப்படையாக இருக்கும். வாராந்த வசூலின்போது, அந்த வசூலில் உள்ள தொழிலாளருக்கான கட்டணமும், கமிஷன் ஏதேனும் இருந்தால் அதுவும் சேர்த்து கணக்கிடுவதற்கான அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படும். செலவுகளை ஈடுசெய்வதற்காக இக்கட்டணம் வாடிக்கையாளரிடம் அறவிடப்படும்; தொழிலாளர்களின் வருமானத்திலிருந்து இது கழிக்கப்பட மாட்டாது.
2.4 முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கட்டணம் செலுத்த வேண்டிய மணித்தியாலங்கள் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆரம்ப நேரம் முதல் முடிவு நேரம் வரையிலான காலப்பகுதியாகும். அந்த நேரப்பகுதிக்குள் வரும் இடைவேளைகளும் கட்டணம் செலுத்த வேண்டிய மணித்தியாலத்தில் சேர்க்கப்படும்; அவற்றுக்கான நேரம் கழிக்கப்படமாட்டாது. பிரிவு 4 இன் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட மணித்தியாலங்களின் அடிப்படையில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும். நிர்ணயிக்கப்பட்ட இறுதி நேரத்திற்குள் உறுதிப்படுத்தப்படாமலும் தகராறுக்கு உட்படாமலும் உள்ள வேலை மணித்தியாலங்கள், தீர்மானிக்கப்பட்ட வேலை நேரங்களாக இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் இதில் அடங்கும்.
2.5 இரத்துச் செய்தல் அல்லது செலுத்தப்படாத கட்டணத்தின் காரணமாக இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதி தொடர்பான கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிகளில் வேறொரு முழுமையாக்கும் விதி குறிப்பிடப்பட்டிருந்தாலே தவிர, தளத்தின் அரைவாசி அல்லது அதற்கு மேற்பட்ட மீதித் தொகையை அடுத்த முழு ரூபாயாக முழுமையாக்கும் முறையைப் (half-up rounding) பயன்படுத்தி முழு ரூபாய்களாக முழுமையாக்கப்படும். முழுமையாக்குதல் ஆனது, ஒவ்வொரு தொகைக் கூறு மற்றும் பொருந்தக்கூடிய நாள் அல்லது வார அடிப்படையில் அடுத்த முழு ரூபாய்க்கு முழுமையாக்கப்படும். எனவே, முழுமையாக்கப்படாத மொத்தத் தொகைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் தொகைக்கும், இவ்வாறு முழுமையாக்கப்பட்ட தொகைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் மொத்தத் தொகைக்கும் இடையில் சிறிய வேறுபாடு ஏற்படலாம்.
2.6 ஒப்புக்கொள்ளப்பட்ட மணித்தியாலக் கட்டணமானது கட்டணம் செலுத்த வேண்டிய அனைத்து மணித்தியாலங்களுக்கும் பொருந்தும். மேலதிக நேரக் கட்டணப் பெருக்கி (Overtime Multiplier), வாராந்த உச்ச வரம்பிற்கு மேற்பட்ட மணித்தியாலங்களுக்கான கூடுதல் கட்டண விகிதம் அல்லது பல்வேறு பணிகளில் தொழிலாளர் ஈடுபட்ட மொத்த வேலை நேரங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் மேலதிகத் தொகை ஆகிய எதையும் தளம் பயன்படுத்தாது. எனினும், குறிப்பிட்ட வேலை முன்பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் அந்தப் வேலைக்கென வேறுபட்ட மணித்தியாலக் கட்டணத்தை நிர்ணயிக்க வாடிக்கையாளரும் தொழிலாளரும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளலாம்.
3. வரிகள்
3.1 Ceylon Seva நிறுவனம் தற்போது பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்கு (VAT) பதிவு செய்யப்படவில்லை என்பதால், பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அறவிடப்படுவதில்லை. எதிர்காலத்தில் VAT பதிவைப் பெற்ற பின்னர், அப்போது நடைமுறையில் இருக்கும் VAT வீதத்தின்படி, Ceylon Seva நிறுவனத்திற்குச் சொந்தமான சேவைக் கமிஷன் மற்றும் பணம் வழங்கல் கட்டணம் ஆகியவற்றுக்கு மட்டுமே VAT சேர்க்கப்படும். தொழிலாளருக்குச் செலுத்துவதற்காகப் பெற்றுக்கொள்ளப்படும் கட்டணத்திற்கு VAT சேர்க்கப்பட மாட்டாது. VAT பதிவு நடைமுறைக்கு வரும் நாள் முதல், VAT தனியாகக் குறிப்பிடப்படும்.
4. பணம் செலுத்தப்படும் முறை
4.1 வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரடிட் கார்ட்அல்லது டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்த வேண்டும். அட்டையைப் பதிவு செய்தல் அல்லது சரிபார்த்தல் என்பது வேலையில் ஈடுபடுவதற்கான கட்டணச் செலுத்தலாகக் கருதப்படாது. சரிபார்ப்பு நோக்கத்திற்காக, தற்காலிகமாக ஒரு தொகை அட்டையில் ஒதுக்கப்பட்டு கட்டணம் அறவிடப்படாமலேயே விடுவிக்கப்படலாம். தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வாடிக்கையாளர் முன்பதிவுகளுக்கான கட்டண முறைகளாக வங்கி மூலமான பணப் பரிமாற்றம், ரொக்கப் பணம் மற்றும் காசோலை ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
4.2 தொழிலாளர் பட்டியல் முழுமையடைந்ததும் அல்லது பகுதியளவிலான தொழிலாளர் பட்டியலை வாடிக்கையாளர் ஏற்றுக்கொண்டதும், திரையில் காட்டப்படும் பொருத்தக் கட்டணத்தை வாடிக்கையாளர் உறுதிப்படுத்துவார். இந்தக் கட்டணமானது, முன்கூட்டியே கமிஷன் அறவிடப்படும் ஆரம்பக் காலப்பகுதிக்கான தொழிலாளர் கட்டணங்களின் மீது கணக்கிடப்படும் 15% சேவைக் கட்டணத்தையும் (கமிஷனையும்), அந்தக் கமிஷன் தொகையின் மீது கணக்கிடப்படும் 2.5% பணம் வழங்கல் கட்டணத்தையும் கொண்டதாகும். இந்தக் கட்டணம் முன்பதிவை உறுதிப்படுத்துவதற்காக அறவிடப்படுவதுடன், வாடிக்கையாளர் முன்பதிவை இரத்துச் செய்தால் தக்கவைக்கப்படும். கட்டணத்தை உறுதிப்படுத்தும் அறிவிப்பை நிராகரிப்பதால் அட்டையிலிருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது. கட்டணம் நிராகரிக்கப்பட்டால், அட்டை விவரங்களைப் புதுப்பித்த பிறகு அந்தக் கட்டணத்தை மீண்டும் செலுத்த முயற்சி செய்யலாம்.
4.3 தானாக கட்டணம் அறவிடும் தொடர்ச்சியான முறைக்கு, அந்த முன்பதிவுக்கென்று தனியான அனுமதி வழங்கப்பட வேண்டும். முதல் வாரத்திற்கான அட்டைத் தொகை ஒதுக்கீடு, முதல் வேலை நாளுக்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் கோரப்படும். அதன் பின்னரான வாரங்களுக்கான ஒதுக்கீடுகள், அடுத்த திங்கட்கிழமை ஆரம்பிக்கும் வாரத்திற்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 10.00 மணிக்கு கோரப்படும். ஒவ்வொரு ஒதுக்கீட்டிலும், தொழிலாளர்களுக்காகத் திட்டமிடப்பட்ட கட்டணங்கள், ஆரம்பக் கமிஷன் அறவிடப்படும் காலப்பகுதிக்கு வெளியிலுள்ள நாட்களுக்குரிய கமிஷன் மற்றும் பணம் வழங்கல் கட்டணங்கள் சேர்க்கப்படும். இந்தத் தொகுதிகளின் மொத்தத்தின் மீது 10% மேலதிகத் தொகையும் ஒதுக்கப்படும். இந்த மேலதிகத் தொகை ஒரு கட்டணம் அல்ல; தேவையான தொகையை விடக் கூடுதலாக ஒதுக்கப்படும் பாதுகாப்புத் தொகையாகும். முதல் வாரம் முழுமையான வாரமாக இல்லாமல் பகுதி வாரமாக இருக்கலாம். முந்தைய வாரத்திற்கான கணக்கீடு நிறைவடைவதற்கு முன்னரே அடுத்த வாரத்திற்கான தொகை ஒதுக்கப்படுவதால், ஒதுக்கப்பட்ட தொகைகள் ஒன்றுடன் ஒன்று காலப்பகுதியில் மேலிடலாம்.
4.4 வாராந்தக் கணக்கீட்டுக்கான இறுதி நேரம் திங்கட்கிழமை அதிகாலை 02.00 மணியாகும். அந்த நேரத்திற்குள் உறுதிப்படுத்தப்படாமலும் தகராறு எழுப்பப்படாமலும் உள்ள தகுதியான நாட்களுக்கான திட்டமிடப்பட்ட மணித்தியாலங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். உறுதிப்படுத்தப்பட்ட நாட்களுக்கு, உறுதிப்படுத்தப்பட்ட மணித்தியாலங்கள் பயன்படுத்தப்படும். இறுதி நேரத்திற்கு முன்னர் ஒரு நாளுக்காகத் தகராறு எழுப்பப்பட்டிருந்தால், அந்த இறுதி நேரத்திற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட மணித்தியாலங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும். இறுதி நேரத்திலும் தகராறு தீர்க்கப்படாமல் இருந்தால், அது அந்த நேரத்தில் முடிவுறுத்தப்பட்டு, அந்நாளுக்கான திட்டமிடப்பட்ட மணித்தியாலங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதனால், கணக்கீட்டுக்குத் தகுதியான ஒவ்வொரு நாளுக்குமான கட்டணமும் அது உள்ளடங்கும் வாரத்திலேயே கணக்கிடப்படும். ஒரு வாரத்திற்கான கணக்கீடு நிறைவடைந்த பின்னர், அந்த வாரம் மீண்டும் திறக்கப்படவோ திருத்தப்படவோ மாற்றியமைக்கப்படவோ மாட்டாது. பின்னர் எழும் கேள்விகள் ஆதரவுக் குழுவிடம் அனுப்பப்பட வேண்டும்.
வேலையில் ஈடுபடுவதன் இறுதி வாரம் இதற்கு விதிவிலக்காகும் — தொழிலாளர் பணியாற்றத் திட்டமிடப்பட்டுள்ள கடைசி நாளை உள்ளடக்கும் வாரமே இறுதி வாரமாகும். அந்த வாரத்தில் உள்ள ஒரு நாளுக்கான தகராறு எவ்வளவு காலமாக நிலுவையில் இருந்தாலும், அது தானாகவே முடிவுறுத்தப்பட மாட்டாது. அந்த வாரத்தில் தீர்க்கப்படாமல் உள்ள அனைத்து தகராறுகளும் தீர்மானிக்கப்பட்ட பின்னரே, அந்த வாரத்திற்கான கணக்கீடு செய்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அறவிடப்படும். அடுத்த வாராந்த இறுதி நேரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், தகராறு தொடர்பான தீர்மானத்தின் அடிப்படையிலேயே இறுதிக் கணக்கீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் இறுதி அறிக்கையும் தயாரிக்கப்படும்.
4.5 இறுதி நேரத்திற்குப் பின்னர் பண வசூல் திட்டமிடப்படும். வழக்கமான இறுதிக் கணக்கீடும் பண வசூலும் திங்கட்கிழமை அதிகாலை 02.15 மணிக்கு மேற்கொள்ளப்படும். ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து செலுத்த வேண்டிய தொகையை Ceylon Seva வசூலித்து, பயன்படுத்தப்படாத மீதித் தொகையை விடுவிக்கும். பணப் பரிவர்த்தனைச் செயலாக்கம், மீண்டும் முயற்சித்தல் அல்லது கட்டணச் சேவை வழங்குநரிடமிருந்து உறுதியான முடிவு கிடைக்காமை போன்ற காரணங்களால் இந்தச் செயல்முறை நிறைவடைவதில் தாமதம் ஏற்படலாம். விடுவிக்கப்பட்ட பணம் அல்லது கடன் தொகை எப்போது பயன்படுத்தக் கிடைக்கும் என்பதை அட்டையை வழங்கிய வங்கி தீர்மானிக்கும்.
4.6 ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகமாகச் செலுத்த வேண்டிய தொகைகள், "நிதி" பகுதியில் அட்டையின் மூலம் தனியாகச் செலுத்தப்பட வேண்டும். அதனுடன் தொடர்புடைய தொழிலாளருக்கான மேலதிக வருமானம், அந்தப் பணம் வெற்றிகரமாகச் செலுத்தப்படும் வரை நிறுத்தி வைக்கப்படும். Ceylon Seva தொழிலாளர்களுக்கான பணத்தைத் தனது சொந்த நிதியிலிருந்து அல்லாமல், வசூலிக்கப்பட்ட தொகைகளிலிருந்தே செலுத்தும்.
4.7 தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகள் வாரந்தோறும் தயாரிக்கப்பட்டு, பணம் வசூலிக்கப்பட்ட பின்னரும் தேவையான கட்டண அனுமதி கிடைத்த பின்னரும், தொழிலாளரின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும். ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதோ அல்லது ஒரு தொகை செலுத்தப்பட வேண்டியதாக மாறியிருப்பதோ, அந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது என்பதற்கான உறுதிப்படுத்தல் அல்ல. "வருமானம்" பகுதியில் நிலுவையிலுள்ள மற்றும் செலுத்தப்பட்ட தொகைகள் காட்டப்படும்.
4.8 ஒவ்வொரு வேலைக்குமான வாராந்த அறிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையான காலப்பகுதியை உள்ளடக்கும். அவற்றில் பணியாற்றிய திகதிகளும் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகையும் குறிப்பிடப்படும். இந்த அறிக்கைகளுக்காக மீண்டும் பணம் செலுத்த வேண்டியதில்லை. மேலதிகத் தொகை அல்லது செலுத்தப்படாத கட்டணத்தின் காரணமாக இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதி தொடர்பான கோரிக்கை உட்பட, தனியாகச் செலுத்த வேண்டிய கட்டணப் பட்டியல் "நிதி" பகுதியில் குறிப்பிடப்படும்.
4.9 தொழிலாளர் பட்டியலும் பொருத்தக் கட்டணக் கொடுப்பனவும் முதல் வேலை நாளுக்கு குறைந்தது 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் நிறைவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். முதல் வாரத்திற்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையில், தானாக அறவிடும் கட்டண அறவீட்டிற்கான அனுமதியும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாவிட்டால், முன்பதிவு இரத்துச் செய்யப்படும். ஏற்கனவே செலுத்தப்பட்ட பொருத்தக் கட்டணம் பிரிவு 5-இன் விதிகளின்படி கையாளப்படும்.
5. இரத்துச் செய்தல்
5.1 முன்பதிவு உறுதிசெய்யப்படுவதற்கு முன்னர் பொருத்தக் கட்டணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்றால், திரும்ப வழங்காமல் வைத்திருக்க வேண்டிய பொருத்தக் கட்டணத் தொகை எதுவும் இருக்காது. விண்ணப்பங்கள் மீளப்பெறப்படும்; தொழிலாளருக்கு இரத்துச் செய்தலுக்கான கொடுப்பனவு எதுவும் வழங்கப்பட வேண்டியதில்லை.
5.2 பொருத்தக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர், வேலை ஆரம்பிப்பதற்கு முன்னர் முன்பதிவு இரத்துச் செய்யப்பட்டால், பொருத்தக் கட்டணமாக அறவிடப்பட்ட தொகை திரும்ப வழங்கப்படாமல் வைத்திருக்கப்படும்; ஏற்கனவே செய்யப்பட்ட அனைத்து வாராந்தத் தொகை ஒதுக்கீடுகளும் முழுமையாக விடுவிக்கப்படும். திரும்ப வழங்காமல் வைத்திருக்கும் பொருத்தக் கட்டணத்தில், பணம் வழங்கல் கட்டணம் உட்பட, பாதித் தொகை உறுதிப்படுத்தப்பட்ட தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும். தொழிலாளர்களுக்கான ஒட்டுமொத்த பங்கு அடுத்த முழு ரூபாயாக கணக்கிடப்படும்; தனிப்பட்ட ஒதுக்கீடுகள் முழு ரூபாயாக ஆக்கப்படும். வாராந்தத் தொகை ஒதுக்கீட்டிலிருந்து மேலதிகத் தொகை எதுவும் அறவிடப்படாது. வேலை தொடங்குவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னரா அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் முன்பதிவு இரத்துச் செய்யப்பட்டதா என்பது இந்த நடைமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
5.3 வேலை ஆரம்பித்த பின்னர் முன்பதிவு இரத்துச் செய்யப்பட்டால், ஏற்கனவே நிறைவடைந்த வாரங்களுக்கான கட்டணங்கள் தொடர்ந்து செலுத்தப்பட வேண்டும். தற்போது நடைபெறும் கட்டணக் கணக்கீட்டு வாரத்திற்கான கட்டணம், திட்டமிடப்பட்ட மணித்தியாலங்களின் அடிப்படையில் அறவிடப்படும். அந்த வாரத்தின் முடிவில் வேலை நிறைவடையும். அதன் பின்னரான வாரங்களுக்குக் கட்டணம் அறவிடப்படாது; அடுத்த வாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள் விடுவிக்கப்படும். தற்போதைய வாரத்திற்கான தொழிலாளர்களின் கொடுப்பனவு, வாடிக்கையாளரிடமிருந்து உரிய தொகை வசூலிக்கப்படுவதற்கு உட்பட்டதாகும்.
5.4 தொழிலாளர் வேலைக்கு வராத சந்தர்ப்பம், பூச்சிய மணித்தியாலங்களாகப் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக ஆதரவுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். வேறு எந்தத் தகராறும் எழுப்பப்படாமல் உறுதிப்படுத்தப்படாத நாட்கள், பிரிவு 4.4-இன்படி திட்டமிடப்பட்ட மணித்தியாலங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும். தொழிலாளர் பணிக்கு வராததற்காக மட்டும் வாடிக்கையாளரிடம் மேலதிக இரத்துச் செய்தல் கட்டணம் எதுவும் அறவிடப்படாது. பொருத்தக் கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படுவதில்லை. தவறாக அறவிடப்பட்ட கட்டணங்கள் மற்றும் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள், சேவை விதிமுறைகளின் 7.10ஆம் பிரிவின்படி கையாளப்படும்.
6. தோல்வியடைந்த கட்டணம் மற்றும் செலுத்தப்படாத கட்டணத்தின் காரணமாக இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதி
6.1 வாராந்திரக் கட்டணத்திற்கான அனுமதி தோல்வியடைந்தாலோ அல்லது பணத்தை வசூலிப்பதற்கான இறுதி முயற்சியும் தோல்வியடைந்தாலோ, முன்பதிவு இடைநிறுத்தப்படலாம். வேலையில் ஈடுபடுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து வாடிக்கையாளருக்கும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் அறிவிக்கப்படும். இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதிக்காகத் தொழிலாளர்களுக்குத் திட்டமிடப்பட்ட வருமானம் சேராது. அந்தக் காலத்தில் அவர்கள் வேறு வேலைகளை ஏற்றுக்கொள்ளலாம். தகுதியான கட்டண முயற்சிகள் பொதுவாக நாளொன்றுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும். கட்டணத்தை மீண்டும் அறவிடுவதற்காக நிலையான 14 நாள் காலப்பகுதியில் தானாகவே வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
6.2 பணம் வெற்றிகரமாக வசூலிக்கப்பட்டால், வேலையில் மீதமுள்ள தகுதியான திகதிகளுக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம். செலுத்தப்படாத கட்டணத்தின் காரணமாக ஏற்பட்ட இடைநிறுத்தத்தை முடிவுறுத்துவது, செயற்பாட்டுப் பொறுப்பாளரின் தீர்மானமாகும். கட்டணத்தை மீண்டும் அறவிடுவதற்கான முயற்சிகளின் எண்ணிக்கை முடிவடைந்ததால் மட்டும் இடைநிறுத்தம் தானாகவே முடிவுறாது.
6.3 செலுத்தப்படாத கட்டணத்தின் காரணமாக ஏற்பட்ட இடைநிறுத்தத்தைச் செயற்பாட்டுப் பொறுப்பாளர் முடிவுறுத்தினால், வாடிக்கையாளரின் கணக்கு முடக்கப்பட்டு, தோல்வியடைந்த வாரத்திற்கான வசூல் அடிப்படைத் தொகையில் 50% தனியாகச் செலுத்த வேண்டிய கோரிக்கையாக அறவிடப்படும். கட்டண அனுமதி தோல்வியடைந்திருந்தால், 10% முன்பதிவு மேலதிகத் தொகையைத் தவிர்த்து, ஒதுக்கப்பட்ட தொழிலாளர்களின் திட்டமிடப்பட்ட கட்டணங்கள், பொருந்தும் கமிஷன் மற்றும் பணம் வழங்கல் கட்டணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தொகை கணக்கிடப்படும். பண வசூல் தோல்வியடைந்திருந்தால், தோல்வியடைந்த வசூல் தொகையே கணக்கீட்டின் அடிப்படையாக இருக்கும். கோரப்படும் தொகை, அதற்குக் கீழுள்ள முழு ரூபாயாகச் முழுமையாக்கப்படும். ஏற்கனவே செலுத்தப்பட்ட கமிஷன் திருப்பி வழங்கப்படாமல் வைத்திருக்கப்படும். வேலை செய்யப்படாததும் நிராகரிக்கப்பட்டதுமான வாரத்திற்காகத் தொழிலாளர்களுக்கு எந்தத் தொகையும் வழங்கப்படாது. இந்தக் கோரிக்கை தொழிலாளர்களின் வருமானத்திற்கான கொடுப்பனவு அல்ல. இத்தகைய சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்குத் தன்னிச்சையாக ஏதேனும் கொடுப்பனவு வழங்கப்பட்டால், அது இணையவழி முறைக்கு வெளியே ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தனித்தனியாகப் பரிசீலித்தே கையாளப்படும்; அத்தகைய கொடுப்பனவைப் பெறுவதற்கு தானாகவே உரிமை ஏற்படாது.
6.4 ஏற்கனவே செய்யப்பட்ட வேலைக்காக முறையாகச் செலுத்தப்பட வேண்டிய தொகைகள் தொடர்ந்து செலுத்தப்பட வேண்டும். Ceylon Seva, தன்னால் இன்னும் வசூலிக்கப்படாத தொழிலாளர்களுக்கான தொகைகள் செலுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்காது. எனினும், கட்டணத்தை வங்கி மூலம் மீளப்பெறும் நடவடிக்கை காரணமாக, சேவை விதிமுறைகளின் 7.4ஆம் பிரிவின்படி கணக்கீடு செய்யப்பட்ட வேலைக்கான தொழிலாளரின் கொடுப்பனவு ஒருபோதும் குறைக்கப்படவோ நிறுத்தி வைக்கப்படவோ மாட்டாது (சேவை விதிமுறைகளின் 7.12ஆம் பிரிவு).
7. தொழிலாளர்கள் செலுத்தும் கட்டணங்கள்
7.1 தொழிலாளர்கள் பதிவுக் கட்டணம், சந்தா அல்லது தளத்திற்கான கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை; மேலும், அவர்கள் ஒப்புக்கொண்ட சேவைக் கட்டணத்திலிருந்தும் தளத்திற்காக எந்தத் தொகையும் கழிக்கப்படாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலை மணித்தியாலங்களுக்காக வசூலிக்கப்பட்ட தொகைகளை Ceylon Seva தொழிலாளர்களுக்கு அனுப்பும். எனினும், சேவை விதிமுறைகளின் 7.6ஆம் பிரிவிலும் சுயாதீன சேவை வழங்குனர் ஒப்பந்தத்தின் 4.5ஆம் பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள பண வசூல் தொடர்பான நிறுத்திவைப்பு நிபந்தனைகள் இதற்குப் பொருந்தும்.
7.2 தொழிலாளர்கள் தங்களுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாங்களே செலுத்துவதற்குப் பொறுப்பானவர்கள். Ceylon Seva, அவர்களுக்காக ஊழியர் வரியை கழிக்கவோ அல்லது சட்டப்படி கட்டாயமான வேலைவாய்ப்புச் சார்ந்த பங்களிப்புகளைச் செலுத்தவோ மாட்டாது.
7.3 சேவை விதிமுறைகள் மற்றும் சுயாதீன சேவை வழங்குனர் ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர்களுக்கான வெகுமதிகளும் பாராட்டுகளும் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுபவையாகும். அவை உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானமாகவோ வாடிக்கையாளருக்கான கட்டணக் கணக்கீட்டின் ஒரு பகுதியாகவோ கருதப்படமாட்டாது.
8. பரிந்துரை செய்தமைக்கான கட்டணம்
8.1 புதிய தொழிலாளர் அல்லது வாடிக்கையாளர் ஒருவரைத் தளத்திற்கு அறிமுகப்படுத்தும் கணக்குரிமையாளருக்கு Ceylon Seva பரிந்துரை செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தும். பரிந்துரைக்கப்பட்ட நபர் எவ்வகையான வேலையின் கீழ் பதிவு செய்கிறார் என்பதன் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் தீர்மானிக்கப்படும்; பரிந்துரை செய்பவரின் சொந்தப் பணிப்பங்கின் அடிப்படையில் அல்ல. இந்தப் பரிந்துரைத் திட்டங்களை சேவை விதிமுறைகளின் 9ஆம் பிரிவு நிர்வகிக்கிறது. இப்பிரிவில் பரிந்துரைக் கட்டணத் தொகைகளும் அவற்றைப் பெறுவதற்கான வரம்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
8.2 பரிந்துரை செய்தமைக்கான கட்டணம் பின்வருமாறு:
| பரிந்துரைக்கப்பட்ட நபர் பதிவு செய்யும் வகை: | பரிந்துரை செய்தமைக்கான கட்டணம் | பரிந்துரைக்கப்பட்ட நபர் பின்வரும் நிலையை அடைந்ததும் தகுதி பெறும்: |
|---|---|---|
| தொழிலாளர் | ரூபா 4,000 | உறுதிப்படுத்தப்பட்ட 40 வேலை மணித்தியாலங்கள் |
| வணிக வாடிக்கையாளர் | ரூபா 10,000 | கட்டணம் கணக்கிடப்பட்ட 100 மணித்தியாலங்கள் |
| வீட்டு வாடிக்கையாளர் | ரூபா 5,600 | கட்டணம் கணக்கிடப்பட்ட 40 மணித்தியாலங்கள் |
8.3 இரு தரப்பினருக்குமான மணித்தியாலங்கள் வெவ்வேறு முறைகளில் கணக்கிடப்படுகின்றன; இந்த வேறுபாடு தெரிந்தே ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர், உண்மையில் பணியாற்றி உறுதிப்படுத்தப்பட்ட மணித்தியாலங்களின் அடிப்படையில் தகுதி பெறுவார். பரிந்துரைக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர், அவருக்குக் கட்டணம் கணக்கிடப்பட்ட மணித்தியாலங்களின் அடிப்படையில் தகுதி பெறுவார். பரிந்துரைக்கப்பட்ட நபர் தளத்தின் ஊடாக மேற்கொள்ளும் அனைத்து வேலைகளிலும் உள்ள மணித்தியாலங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
8.4 பரிந்துரைக்கப்பட்ட நபர் பதிவு செய்த திகதியிலிருந்து 365 நாட்களுக்குள், அந்தப் பரிந்துரை அதற்குரிய உச்ச அளவிலான தகுதி வரம்பை அடைய வேண்டும். அவ்வாறு அடையாவிட்டால், அந்தப் பரிந்துரை காலாவதியாகிவிடும்; அதற்கான கட்டணம் செலுத்தப்படமாட்டாது. ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட நபருக்கும் ஒருமுறை மட்டுமே பரிந்துரைக் கட்டணம் செலுத்தப்படும். இந்தத் தொகை Ceylon Seva-வின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும். எந்தவொரு வாடிக்கையாளரிடமும் இந்தக் கட்டணம் அறவிடப்படாது; தொழிலாளரின் கட்டணத்திலிருந்தும் கழிக்கப்படாது. ஒரு கணக்குரிமையாளர் செய்யக்கூடிய பரிந்துரைகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
8.5 ஒரு பரிந்துரை தகுதி பெற்ற பின்னர், பரிந்துரை செய்பவர் ஒரு தொழிலாளராக இருந்தால், வழக்கமான தொழிலாளர் கொடுப்பனவு நடைமுறையின் ஊடாகப் பரிந்துரைக் கட்டணம் செலுத்தப்படும். மற்ற பரிந்துரையாளர்களுக்கு, தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டின்படி கட்டணம் வழங்கப்படும்.
8.6 பிரிவு 9.1 மற்றும் சேவை விதிமுறைகளின் 9.7ஆம் பிரிவின்படி, Ceylon Seva பரிந்துரைக் கட்டணத்தையோ உச்ச தகுதி வரம்பையோ மாற்றலாம்; அல்லது ஒரு திட்டத்தை இடைநிறுத்தலாம் அல்லது முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால், அந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட நபர் பதிவு செய்திருந்தால், அந்தப் பரிந்துரைக்கு மாற்றம் பொருந்தாது. அந்த நபர் பதிவு செய்த திகதியில் வெளியிடப்பட்டிருந்த கட்டணமே செலுத்தப்படும்; அதே திகதியில் வெளியிடப்பட்ட தகுதி வரம்பின் அடிப்படையிலேயே தகுதி மதிப்பிடப்படும்.
9. மாற்றங்களும் தொடர்பு கொள்தலும்
9.1 ஆவணத்தின் பதிப்பு வரலாற்றை Ceylon Seva பராமரிக்கிறது. கட்டணங்களிலும் அவற்றைக் கணக்கிடுவதற்கான அடிப்படைகளிலும் செய்யப்படும் மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்டு அறிவிக்கப்படும். கட்டணக் கணக்கீட்டிற்குப் பொருத்தமான கட்டணங்களை தளம் பதிவு செய்து வைத்திருக்கும். பின்னர் இணையப்பக்கத்தில் செய்யப்படும் திருத்தம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஏற்றுக்கொள்ளல் பதிவை மாற்றாது.
9.2 இந்தக் கட்டணக் முறை தொடர்பான கேள்விகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கட்டணத் தகராறுகள் மற்றும் பண மீளச்செலுத்தல் கோரிக்கைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். Ceylon Seva (Pvt) Ltd பதிவு இலக்கம்: PV 00240573 189/1, மாத்தறை வீதி, உனவட்டுன, காலி 80600, இலங்கை.